மல்பெரிச் செடி - நோய் தாக்குதலும் மேலாண்மையும்

பலவகை நோய்க்கிருமிகள் மல்பெரிச் செடியைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
1. வேரழுகல்

வேரழுகல் நோயானது மேக்ரோபோமினா மற்றும் ப்யூசேரியம் போன்ற பூஞ்சாணங்களால் ஏற்படுகின்றது.

நோயின் அறிகுறிகள்

  • கோடைக்காலங்களில் இந்நோயின் தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் ஆரம்ப நிலையில்  இலைகளின் ஓரங்கள் கருகி பின் செடி முழுவதும் வாடிக் காணப்படும்.
  • அடித் தண்டுப்பகுதியில் கருப்பு நிறத்தில் பூஞ்சாணம் வளர்ந்து படர்ந்திருக்கும்.
  • இந்நோய் மண் மற்றும் நீர் மூலமாகப் பரவுகிறது.
Mulbery Disease

மேலாண்மை

  • எக்டருக்கு 20 டன் என்ற அளவில் தொழு உரம் இடுவதன் மூலம் இதன் சேதத்தைத் தவிர்க்கலாம்.
  • நோயின் ஆரம்பக் காலத்தில் வட்ட வடிவ பாத்திகளை அமைத்து காப்பர் ஆக்ஸிகுளோரைடு (2 கிராம், லிட்டர் அளவில்) வேரில் ஊற்றவேண்டும்.
  • செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் போது தாக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்றசெடிகளுக்கு நீர் பரவாமல் வட்டப்பாத்தி அமைப்பது அவசியம்.
  • நோய் தாக்கப்பட்ட காய்ந்த செடிகளை வேரோடு எரித்துவிடவேண்டும்.
  • நன்மை செய்யும் பூஞ்சாணமாகிய டிரைக்கோடெர்மா விரிடிகளை ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் தொழு உரத்துடன் கலந்து தாக்கப்பட்ட செடிகளுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள செடிகளுக்கும் இடவேண்டும்.
  • உயிர்ப்பூஞ்சாணக் கொல்லியான ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவை ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் நடவு செய்யும் போதோ அல்லது கவாத்து செய்யும் போதோ வேர்ப்பகுதியில் இடவேண்டும்.

2. சாம்பல் நோய்

இது ‘வைல்லோடிக்னா கொரிலியே’ என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்
மல்பெரி இலைகளின் அடிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் பவுடர் தூவியது போல் திட்டு திட்டாக இருக்கும். இதேபோல் மேல்புறத்திலும் தோன்றும் பின்பு இலைகள் முழுவதும் பரவிவிடும். வெள்ளைநிற புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறி உதிர்ந்துவிடும். இதன் சேதம் 10-15 சதம் விளைச்சலைப் பாதிக்கும்.

மேலாண்மை
  • அகன்ற இடைவெளி விட்டுப் பயிரிடுவதன் மூலம் செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து சூரியஒளி படுவதால் இந்நோயின் தீவிரம் குறையும்.
  • நலிந்த ஒடிந்த காய்ந்த கிளைகளை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
  • களைகள் இல்லாமல் வைத்திருக்கவேண்டும்.
  • அதிக மழை பெய்யும் மலைப்பிரதேசங்கள் இதன் தீவிரம் அதிகமாக இருக்கும்பொழுது கார்பண்டிசிம் அல்லது டினோகாாப் 0.2 சதம் (2 கிராம், லிட்டர் நீருக்கு) இந்நோயின் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் தெளிக்கவேண்டும். மீண்டும் 15 நாட்கள் கழித்து மறுமுறை தெளிக்கவேண்டும். மருந்து தெளித்தபின்பு 15 நாட்களுக்கு இலைகளை உணவாகப் புழுக்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

3. துரு நோய்

இந்நோய் ‘பெரிடியோஸ்போரா மோரி’ என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது.
நோயின் அறிகுறிகள் மற்றும் சாதகமாக சூழ்நிலை
இலைகளின் அடிப்புறத்தில் ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையில் மிகவும் சிறிய வெளிர்ய பழுப்பு நிறத்தில் தோன்றும் பின்பு ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறி துரு போன்ற புள்ளிகள் தோன்றும்.
இந்நோய் குளிர்காலங்களில் (நவம்பர் முதல் ஜனவரி) அதிகமாக இருக்கும்.

Mulbery Disease

மேலாண்மை
0.2 சதம் கார்பெண்டிசம் அல்லது குளோரோதலானில் (2 கிராம் லிட்டர்) தெளிக்கவேண்டும்.

4.  நூற்புழுக்கள்

  • உலக அளவில் 32 வகையான நூற்புழுக்கள் மல்பெரியைத் தாக்குகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது ‘மெலாய்டோகைன் இன்காக்னிட்டா’ என்ற நூற்புழு. அது மல்பெரியில் வேரினைத் தாக்கி வேர் முடிச்சுகளை உண்டு பண்ணுகின்றன.
  • இச்சேதத்தினால் செடி வளர்ச்சி இன்றி, பச்சையமிழந்து, வாடிக் காணப்படும்.
  • இந்நூற்புழுக்களின் சேதம் மல்பெரி தோட்டங்களில் ஆங்காங்கே காணப்படும்.

மேலாண்மை

  • புங்கம் இலை மக்குகளை 1 டன், எக்டர் என்ற அளவில் இட்டு நூற்புழு சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஊடுபயிராக சாமந்திச் செடிகளைப் பயிரிட்டு நூற்புழு சேதத்தைக் குறைக்கலாம்.
  • மக்கிய குப்பை, தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் மக்கிய கரும்புச்சக்கை கழிவு ஆகியவற்றை இடுவதினால் சேதம் குறைகிறது.
  • கார்போபியூரான் 5 கிராம் மற்றும் போரேட் 2 கிராம் என்ற அளில் செடிகளில் வேர்ப் பகுதியில் இடுவதனால் சேதம் குறைகிறது.
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2017